Pages

Sunday, 4 August 2013

ஜோதிடம் என்றால்???????????

பதிவு 4

சென்ற பதிவில்

பண்டைய கிரேக்கர்களாலும், பபிலோனியர்களாலும், எகிப்தியர்களாலும் கோள்களையும், மனித வாழ்க்கையையும் சம்மந்தப் படுத்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஜோதிடம்... என்பது வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் கருத்து. யூகங்கள் பெரும்பாலும் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். இப்படி இருக்க ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பகுத்தறிவுள்ள நாம் சிந்திக்க வேண்டாமா? - இது பற்றி பார்ப்போம் என்று முடித்திருந்தேன்.

விளக்கம்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் – 423

ஒரு பொருளைப்பற்றி யார் கூறியிருந்தாலும், கூறியவர் படித்தவரா? படிக்காதவரா? வறியவரா? செல்வந்தரா? வயதில் அல்லது அனுபவத்தில் பெரியவரா? சிறியவரா? மகானா? பாமரனா? யார் கூறியிருந்தாலும், கூறியவரைப் பற்றி சிந்திக்காமல் கூறப்பட்ட பொருளின் உண்மைத் தண்மையை ஆராய்வதே அறிவுடைமை ஆகும்.

ஜோதிடத்தை எழுதியது பாபிலோனியர்களா? கிரேக்கர்களா? என்பதல்ல பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, யூகங்கள் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம், என்று வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களால் கூறப்பட்டதுதான் பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதைவிட, யூகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டது என்பதுதான் மிகச்சரியானது.

விஞ்ஞானம் அல்லது அறிவியலின் அடிப்படையே யூகங்கள்தானே?

யூகம் இல்லாமல் அறிவியல் ஏது? அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று யூகிக்காமல் எப்படி ஆய்வை மேற்கொண்டு தொடர முடியும்?

அணுவைத்துளைத்து எழுகடல் புகுத்தி குறுக தறித்த குறள் – என்ற ஒளவையாரின் யூகத்தின் விஸ்வரூபம்தானே இன்றைய அணு விஞ்ஞானம்.

இரவையும் ஒளிர வைக்க முடியும் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் யூகத்தின் விளைவுதானே இன்றைய மெர்குரி, சோடியம் வேப்பர், நியான் இன்னும் பலவிதமான மின் விளக்குகள்.

தந்திக் கம்பி மூலம் பேசமுடியும் என்ற கிரகாம் பெல்லின் யூகத்தின் அபரிதமான வளர்ச்சிதானே இன்றைய செல்போன்.

இப்படி யூகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய விஞ்ஞானிகளின் அதிகப் பொருட்செலவில் செய்யப்பட ஆய்வுகள் தோல்வியடைந்திருக்கின்றனவே! எனவே விஞ்ஞானம் என்பது சுத்த ஹம்பக் என்று கூறுவது சரியாகுமா? நியாயம்தான் ஆகுமா?

அதுபோல ஜோதிடத்தை மூடநம்பிக்கை, ஹம்பக் என்று கூறுவது சரியல்ல. நியாயமும் அல்ல.

விஞ்ஞானிகள் யூகித்தால் அது விஞ்ஞானம், பழங்கால முனிவர்களும், சித்தர்களும் யூகித்தால் அது வெறும் யூகம். இது சரியா?

பகுத்தறிவாளர்களே! தயவுசெய்து கொஞ்ஞ்ஞ்சம் சிந்தியுங்களேன்.

அடுத்தப் பதிவில்

சூரியன் நிலையானது, பூமி முதற்கொண்டு புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன, என்று விஞ்ஞானம் கூறுகின்றது. இது ஆறாம் வகுப்புப் பாடம். ஆனால் ஜோதிடத்தில் சூரியன் முதற்கொண்டு அனைத்து கோள்களும் பூமியை சுற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆனால் ஜோதிடமோ கோள் என்கிறது. சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆனால் இதையும் கோள் என்றே ஜோதிடம் கூறுகிறது. இப்படி ஜோதிடத்தின் அடிப்படையே விஞ்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஜோதிடத்தை விஞ்ஞானம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. நீரோ நுண்விஞ்ஞானம் என்கிறீர். வேடிக்கையாக இருக்கிறது. எப்படி ஏற்றுக்க்ள்ள முடியும்? - இதற்கு விளக்கம் காண்போம்

No comments:

Post a Comment