Pages

Tuesday 19 February 2013

தாயன்பும், பிள்ளையன்பும்



ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"
இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு.

 "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, "குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.
இப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. " உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது.? எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது" என்றது தாய்க் கழுகை நோக்கி.

அதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.



உலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.


ஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்

எஜமானனின் அன்பு


பணக்காரன் ஒருவனது தோட்டத்தில் தோட்டக்காரர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். ஒருவன் சோம்பேறி, வேலை செய்வதில் விருப்பம் இல்லாதவன். எஜமான் தோட்டத்துக்கு வரும் போதெல்லாம் ஓடோடிச் சென்று கூப்பிய கரங்களுடன் குழைந்து நிற்பான்.

இன்னொருவன் அதிகம் பேசுவதில்லை. கடுமையாக உழைப்பான். பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, எஜமான் வீட்டுக்குச் சுமந்து செல்வான். இந்த இருவரில், எஜமானின் அன்பு யாருக்குக் கிடைக்கும்?

கடவுள்தான் எஜமான். இந்த உலகமே அவருடைய தோட்டம். இங்கே இருவகை மக்கள் இருக்கின்றனர். ஒரு வகையினர் சோம்பேறிகள்; ஏமாற்றுக்காரர்கள். இறைவனின் அழகையும், பண்பு நலன்களையும் புகழ்பவர்கள்.

மற்றொரு வகையினர், பலவீனமான மனிதர்க்கும், ஆண்டவன் படைத்த அனைத்து உயிர்களுக்கும் கைம்மாறு கருதாமல் உழைத்துத் தொண்டாற்றுபவர்கள்.

இறைவனின் அன்புக்கு உரியவர்கள். பிறர் நலனுக்காகச் செயல்படுபவர்களே! கருத்தாழம் மிக்க இந்த விளக்கத்தை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

பலன் கருதாமல் இறைவனுக்கும், பரம்பொருளால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் தங்கள் செய்கையால் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமே அன்றி, சும்மா இருத்தல் தகாது என்கிறது நம் சமயம்.

நான், எனது என்ற உடமை-மனோபாவம் உள்ளவர்களால் நிம்மதியான வாழ்க்கையை எந்த நாளும் நடத்த முடியாது. நிம்மதியும், அமைதியும் ஆயுள்வரை நீடிக்க, விளைவுகளில் நாட்டம் செலுத்தாமல், செயல்களில் ஈஸ்வர அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டும்.

மனிதன் உயிரைப் பாதுகாக்க விரும்பினால், அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கர்மம் செய்யாமல் மனிதன் அரை கணமேனும் இருக்க முடியாது. ‘நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதி’ என்கிறார் மகாகவி பாரதி.