சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால் நிலாவுக்குப் போவது பற்றி யாராவது பேசியிருந்தாலோ,
உலகத்தில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் இன்டர்நெட் மூலம் ஒன்றாக இணைக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தாலோ,
சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் நான் ஆகாய விமானம் ஒன்றை உருவாக்கப் போகிறேன், அதில் ஏறி ஆகாயத்தில் பயணம் செய்யலாம் என்று யாராவது பேசியிருந்தாலோ,
‘பாவம் இவனுக்கு புத்தி கெட்டுவிட்டது’ என்றோ, ‘இவன் முட்டாள்தனமாக ஏதோ உளறுகிறான்’ என்றோ, ஏளனம் பேசியிருப்பார்கள்.
ஆனால் இன்றோ செவ்வாய் கிரகத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கு. இன்டர்நெட்டும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு வளர்ந்திருக்கு.
இப்படி சில காலத்திற்கு முன் நம்பமுடியாத பல விஷயங்கள் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபமாக வளர்ந்திருக்கிறது. சிலகாலத்திற்கு முன் நம்பமுடியாத பல விஷயங்கள், இன்று நமது அன்றாட அத்தியாவசிய தேவையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இதற்க்கு காரணம் என்ன என்று கேட்டால் “விஞ்ஞானத்தின் வளர்ச்சி” என்று பகுத்தறிவாளர்கள் கூறுவார்கள்.
உண்மை அதுவா?
அறிவின் வளர்ச்சி, என்பதுதானே சரியான பதில். (அறிவு பிரசவித்ததுதானே விஞ்ஞானம்.)
அறிவின் வளர்ச்சியை இன்னும் ஆழ்ந்து “சரியாக அல்லது முறையாக வளர்ந்திருக்கிறதா?” என்று யோசித்தால், இல்லை என்பதே எனது கருத்து.
காரணம், கம்ப்யூட்டர் கண்டுபிடித்த அதே அறிவுதான் “வைரஸ்”-ஐயும் கண்டுபிடித்தது
வைரஸ்-ஐக் கண்டுபிடித்த அதே அறிவுதான் ஆண்ட்டி வைரஸ்-ஐயும் கண்டுபிடித்தது.
இன்டர்நெட்டை கண்டுபிடித்த அதே அறிவுதான் அதில் “தகாத, மட்டரகமான விஷயங்களை” உலாவ விட்டது.
சட்டம் படித்த அதே அறிவுதான் சட்டத்தில் இருக்கிற ஓட்டைகளையும் கண்டுபிடிக்கிறது.
இப்படி எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நல்லவிஷயங்களை கண்டுபிடித்ததும் அறிவுதான், தீய விஷயங்களை கண்டுபிடித்ததும் அறிவுதான்
ஆக, அறிவு நல்லது கெட்டது தெரியாமல், வளர்ந்திருக்கிறது.
அறிவு இப்படி ரெண்டுங்கெட்டான் வளர்ச்சி பெற்றதற்கு காரணம் என்ன?
சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால், அறிவும் மனமும் ஒன்றுபட்டு செயல்படாததே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
என்ன நான் சொல்வது சரிதானே?
பூமியிலிருந்துகொண்டே ஒரு சிறிய இயந்திரத்தை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு அனுப்பி அங்கிருக்கும் சூழ்நிலையை ஆராய்கிறது, இப்படி எவ்வளவோ சாதித்திருக்கிறது இந்த அறிவு, ஆனால் மனிதன் மட்டும் திருந்தியபாடில்லை.
காரணம் அறிவும் மனமும் ஒன்றுபட்டு செயல்படாததே,
அறிவுக்கும் மனதுக்கும் இடையே உள்ள போராட்டமே.
இப்படிப்பட்ட ஒரு போராட்டத்திற்குக் காரணம், பகுத்தறிவு என்ற போர்வையில் உள்ள பொல்லாத அறிவுதான்.
தான் ஒரு பகுத்தறிவாளன், தான் ஒரு அறிவியலாளன், என்ற கர்வமும் ஆணவமும் கலந்த அந்த பொல்லாத அறிவுதான்.
இவர்களுடைய இந்த கர்வத்திற்கும், ஆனவத்திற்கும் காரணம்,
பகுத்தறிவு என்றால் என்ன? அறிவியல் என்றால் என்ன? என்று தெரியாததே.
அறிவு எப்பொழுது கர்வமும் ஆணவமும் கலக்காத உண்மையான அறிவாகும்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட “நாலடியார்” என்ற இலக்கியத்திலிருந்து ஒரு பாடலை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
“பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்றுகோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லாநோலா உடம்பிற்கு அறிவு.”
“பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்” என்ற வரிக்குப் பெருள்‘பாலால் கழுவி பின் உலர்த்தி பின் பாலால் கழுவி பின் உலர்த்தி இப்படி பலமுறை பலநாள் செய்யப்பட்டாலும்’
“வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று” என்ற வரிக்கு பொருள்‘கரித்துண்டானது வெள்ளை நிறத்தின் பக்கம் கூட நிற்காது.’
“கோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு”ஒருவனுடைய அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அறிவியல் கருத்துக்களை அவன் காது வழியாக தினித்தாலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு இல்லாத உடம்பில் அந்த அறிவு போகாது.
அதாவது ஒரு பொருளை ஆய்வு செய்யும் போது மனப்பூர்வமான ஈடுபாடு இல்லை என்றால், அங்கு மெய்ஞானம் பக்கத்தில் கூட வராது.
மெய்ஞானம் இல்லாத விஞ்ஞானம் (அறிவியல) முழுமை பெற்றதாகாது. ( இங்கு மனப்பூர்வமான ஈடுபாடில்லாத அறிவு - கரித்துண்டு, படித்த புத்தகங்கள் - பால் )
இங்கு ஒரு நுணுக்கமான விஷயத்தை நுணுக்கமாக கவனிக்க வேண்டும்
அறிவும் மனமும் இனைந்து செயலாற்றும்போது மனதின் ஆதிக்கம் அறிவின் ஆதிக்கத்தைவிட சற்று கூடுதலாக இருந்தால் கூட அங்கு மூடநம்பிக்கை முளைக்க ஆரம்பித்துவிடும் அபாயம் உண்டு.
அதே சமயம் மனதின் ஆதிக்கத்தைவிட அறிவின் ஆதிக்கம் சற்று கூடுதலாக இருந்தால் கூட அங்கு தீமையின் ஆதிக்கம், அழிவின் ஆதிக்கம் முளைக்க ஆரம்பித்துவிடும் பேரபாயம் உண்டு.
எனவே மனமும் அறிவும் ஒன்றை ஒன்று மிகாமல் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதே மிகச்சிறந்த அறிவு. அதுவே ஞானம.
1 comment:
தன்னை அறிய வேண்டும்... அதுவும் தானே (முடிந்தால்)
விரிவான, விளக்கமான பகிர்வுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
Post a Comment