Pages

Thursday, 9 August 2012

வெற்றி நிச்சயம்..............


இந்த கட்டுரையின் நோக்கம் குறைந்தபட்ச தகுதியை உடைய அனைவராலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும். என்ற கருத்தை இன்றைய இருபால் இளைஞர்களுக்கு உணர்த்துவதே....


நீ எங்கு இருந்தாய்?, எங்கு இருக்கிறாய்?, எப்படி இருந்தாய்?, எப்படி இருக்கிறாய்? என்பது முக்கியம் இல்லை. எங்கு செல்கிறாய்? எப்படி செல்கிறாய்? என்பதுதான் முக்கியம்.

உங்களின் கடந்த காலத்திற்கு நீங்கள் பொறுப்பல்ல...ஆனால் உங்கள் வருங்காலத்திற்கு நீங்கள், நீங்கள் மட்டுமே முழு பொறுப்பு
.
இளைஞர்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.... மறந்துவிடாதீர்கள்...


சாதணையாளர்கள் அனைவருமே சாமானியர்களாக இருந்தவர்கள்தான்.


உங்கள் லட்சியம் பிறர் பார்வையில் உயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமோ கட்டாயமோ இல்லை. உங்கள் மனதுக்குப் பிடித்ததாக, நேர்மையானதாக, இருக்க வேண்டும்.


உங்கள் மனதுக்குப் பிடித்ததாக, நேர்மையானதாக இருந்தால் மட்டும் போதாது, உங்கள் லட்சியத்தை அடைவதற்கு கடைபிடிக்கும் வழிமுறைகளும், உழைப்பும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும், ஆத்மார்த்தமானதாகவும் இருக்க வேண்டும்


எவ்வளவு வேகமாக பயணிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எந்த திசையில் பயணிக்கிறோம் என்பதுதான் முக்கியம்..


இளைஞனே! நீ எண்ணித் துணிந்தபின் உன்னை உலகம் முழுவதும் எதிர்த்தாலும் கொண்ட குறிக்கோளை கைவிட்டுவிடாதே. - ‘சுவாமி’ விவேகானந்தர்


உன்னால் முடியும் தம்பி, தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி. – சொன்னது – யாரோ


உங்கள் லட்சியத்தை யாரிடமாவது கூறும்போது, உங்கள் கனவு சுக்கு நூறாகும்படி அவர்கள் உங்களை கேலி, கிண்டல் செய்யலாம்.


உதாரணமாக நீங்கள் ஒரு சாதாரணமான நிலையில் இருக்கின்ற சாமானியன். உங்கள் லட்சியம் நீங்கள் ஒரு கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்பது. அதற்கான (PROJECT) திட்டமும், திறமையும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உங்களிடம் உள்ளது. இந்த லட்சியத்தை உங்கள் உற்றார் உறவினர்களிடம் கூறும்போது அவர்கள் உங்களைப் பார்த்து மிகவும் கேவலமாக, 


போடா...லூசுபயலே... போய் ஆகர வேலையைப் பார்ரா டேய்.....
கோடீஸ்வரன் ஆகர மொகறையப் பாத்தா தெரியாது?
இவனெல்லாம் கோடீஸ்வரன் ஆயிட்டாலும்....
எங்கிட்ட சொன்னமாதிரி வேற யார்கிட்டயும் சொல்லிரப்போற...
மொசபுடிக்கிற நாய மூஞ்ச பாத்தாலே தெரியாது?
பத்து ரூபாய்க்கே வக்கில்லாதவன்... இவனெல்லாம் கோடீஸ்வரன் ஆகப்போரானாம்....
இப்படியே சொல்லிக்கிட்டிரு... ஒருநாள் இல்லாட்டி ஒருநாளைக்கு சட்டைய கிழிச்சிகிட்டு பயித்தியமா அலையப் போறே....
....என்று உங்கள் கனவு லட்சியம் எல்லாமே தகர்ந்து தவிடுபொடியாகும்படி ஏளனம் செய்வார்கள்.


இந்த சூழ்நிலையில் நீங்கள்
மனிதா... உன் மனதை கீறி விதை போடு மரமாகும்.
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்.
என்ற கவிஞர் பா. விஜய் -ன் வரிகளை திரும்பத்திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்.

விமர்சனம் என்பது நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்க முடியாத ஒன்று.
ஒவ்வொரு குழந்தையுமே பிறந்த உடனேயே விமர்சனத்திற்கு ஆளாகிறது.
“முழியப்பார் திருட்டு முழி, அவனுடைய அப்பனாட்டமே”


இளைஞர்களே விமர்சனத்தைக் கேட்டு துவண்டுவிடாதீர்கள்.
அந்தக் கேலி விமர்சனங்கள் உங்கள் லட்சியக் கனவை வலுவடையச் செய்யவேண்டுமே தவிர, நொறுங்கச் செய்துவிடக்கூடாது.


உளி படாத கல் சிலையாவதில்லை.


என்னாலும் முடியும் என்று நினைப்பது நம்பிக்கை
நிச்சயமாக என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.
என்னைத் தவிர வேறு எவ(ளா)னாலும் முடியாது என்பது ஆணவம்.


நம்பிக்கை உன்னை உயர்த்தும்
தன்னம்பிக்கை உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும்.
ஆணவம் உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கும்


பெரும்பாலான இளைஞர்கள், தான் மட்டும்தான் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பதாகவும், மற்ற அனைவருமே சந்தோஷமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு,
“என்னடா வாழ்க்கை, எப்பப்பார்த்தாலும் போராட்டம்.. போராட்டம்...போராட்டம்...
வாழ்க்கையே போரடிசிப் போச்சி” என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள்.


இப்பூவுலகில் மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவனும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.


போராட்டமே எனக்கு வாழ்க்கையாகிவிட்டது. என்று அங்கலாய்த்துக்கொள்கிறாயே, இதற்குக் காரணம் என்னவென்று யோசித்ததுண்டா?


எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணமதான், காரணம்.


என்ன உளறுகிறீர்? எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? 


ஒரு சின்னக் கதை. (கதையல்ல நிஜம)


யுனிவர்சிட்டியிலேயே முதலாவது மாணவனாக தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்ற ஒரு நடுத்தர வர்க்க B.E பட்டதாரி, தகுதியானவர்களுக்கு மட்டுமே வேண்டும் உதவியை தாராளமாகச் செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய செல்வந்தரிடம் உதவி கேட்கச் சென்றான். அந்தப் பெரியவரும், வா தம்பி என்ன விஷயம்? என்று கேட்டார்.
இந்த பட்டதாரியும், தன் கல்வித் தகுதியைக் கூறி அதற்கான சான்றிதழ்களையும் பெரியவரிடம் காட்டி, ஐயா நீங்கள் உதவி செய்தால் ஏதாவது தொழில் செய்து பிளைத்துக்கொள்வேன். அல்லது ஏதாவது நல்ல கம்பெனியில, ஏதாவது நல்ல வேலையில சேத்துவிட்டீங்கனா உதவியா இருக்கும். என்று கேட்டான்.


அதே சமயத்தில், 12-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் மேற்படி பெரியவரிடம் உதவி கேட்க வந்தான் ஒரு இளைஞன். அந்தப் பெரியவர் அவனையும் வாதம்பி, என்ன விஷயம்? என்று கேட்டார்.


இந்த இளைஞனும், தன் நிலையைக் கூறி 4 சிந்து மாடு வாங்கிக் குடுத்தீங்கன்னா பத்து வீட்டுக்கு பால் ஊத்தி வர்ர வருமானத்துல வீட்டுசெலவையும் பாத்துக்கிட்டு, நானும் தபால்ல மேல படிச்சிக்குவேனுங்க. என்று கேட்டான்.


அந்தப் பெரியவர் மறுநிமிடமே தன் மகனைக் கூப்பிட்டு இந்த இளைஞனுக்கு (12 ம் வகுப்பு) வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து தரும்படி சொன்னார். அவரும் 6 சிந்து மாடுகளை வாங்கிக் கொடுத்து, அவற்றை பராமரிக்கத் தேவையான கொட்டகையும் அமைத்துக் கொடுத்தார்.


அனால் B.E பட்டதாரிக்கு பிறகு பார்க்கலாம். என்றுகூறி அனுப்பிவிட்டார்.


சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மாடு வாங்கிய இளைஞன் M.A., Ph.D முடித்துவிட்டு ஒரு கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அந்த B.E பட்டதாரி அந்த சமயத்தில்தான் ஒரு தனியார் நிறுவனத்தில் தனது +2 படிப்பின் அடிப்படையில் சாதாரண வேளையில் அமர்கிறான்.


அந்தப் பெரியவர் ஏன் B.E பட்டதாரிக்கு உதவி செய்யவில்லை?


அந்த B.E பட்டதாரி அந்தப் பெரியவரிடம் கேட்டதை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்களேன்...


அவன் என்ன கேட்டான்? ஏதாவது தொழில், ஏதாவது கம்பெனியில், ஏதாவது வேலை என்றுதான் கேட்டானே தவிர, இன்ன தொழில், இன்ன கம்பெனி, இன்னவேலை என்று கேட்கவில்லை. அதாவது அவனுக்கென்று ஒரு குறிக்கோள் இல்லை.


ஆனால் இந்த +2 இளைஞனின் வார்த்தைகளில் அவனுடைய தெளிவான சிந்தனை தெரிகிறது. தீர்க்கமான எண்ணம தெரிகிறது.


எனவே, இளைஞனர்களே! எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பதை விட 


இதைத்தான் நான் சாதிப்பேன் என்று ஒரு உறுதியான தீர்மானமான கொள்கையோடு போராடுங்கள் வெற்றி நிச்சயம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பல கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

Post a Comment