உனக்குள் இருக்கும் உன்னை....
கொலம்பஸ், ஆம் அமெரிக்காவை கண்டு பிடித்த அதே கொலம்பஸ்-ஐப் பற்றித்தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
கொலம்பஸ் தான் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே! இன்னும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
உண்மைதான். இத
ுமட்டும்தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இந்த சாதனைக்குப் பின்னால் உள்ள வெற்றியின் ரகசியம் தெரியுமா உனக்கு? தெரிந்திருந்தால் மிக்க சந்தோஷமே.
தெரியாவிட்டால் உனக்கு மட்டும் சொல்கிறேன், கேட்டுக்கொள். யாரிடமும் சொல்லிவிடாதே. இது ரகசியம்.
கொலம்பஸ் சிறுவனாக இருந்தபொழுதே அவன் மனதில் ஒரு லட்சியம். ஆனால் அவன் தந்தையோ ஒரு ஏழை நெசவுத் தொழிலாளி. ஒரு சராசரி தகப்பன் என்ன செய்வாரோ அதைத்தான் அவரும் செய்தார். தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தன் மகனையும் தன்னுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தினார்.
ஆனால் நம் கொலம்பஸ்-ன் கைகளும் கால்களும் மட்டுமே நெசவு செய்தன. அவன் மனம் மட்டும் தன் லட்சியக் கனவுகளைத் திரும்பத்திரும்ப சிந்தித்துக் கொண்டிருந்தது.
\\ என்றாவது ஒருநாள் எதையாவது, எப்படியாவது நான் சாதித்துக் காட்டுவேன், அன்று இந்த உலகமே என்னை திரும்பிப் பார்க்கும் // என்று வெறும் வெட்டிப் பேச்சாக இல்லாமல் தான் சாதிக்கவேண்டியதை தீர்க்கமாக சிந்தித்ததோடல்லாமல், அதற்க்கான திட்டங்களையும் தீட்டி வைத்திருந்தான். அந்தத் திட்டம்தான் “இந்தியாவுக்குக் கடல்வழி ” என்பது.
இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்க வேண்டும், கடல் வழியாக இந்தியாவை அடையவேண்டும் என்ற அவரின் லட்சியத்தை பல செல்வந்தர்களிடம் கூறி கடல் வழி பயணிக்கத் தேவையான கப்பல், உணவு போன்ற வகையில் உதவி செய்யும்படி கேட்டான்.
அனைவரும் எள்ளி நகையாடினார்களே தவிர ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இவனும் அசரவில்லை, தோல்வியில் துவண்டுவிடவில்லை. மேலும் பல அரசாங்கங்களை உதவி கேட்டு அணுகினான். ஆனால் யாருக்கும் இவன் மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
இப்படியே சுமார் பத்து ஆண்டு காலம் போராடிப் போராடி, தோற்றான். ஆனாலும் இவனின் லட்சிய வெறி அடங்கியபாடில்லை. அந்த லட்சியம் அவனின் ஆத்மாவோடு கலந்ததல்லவா.
மீண்டும் மீண்டும் போராடினான். கடைசியாக ஸ்பெயின நாட்டு அரசு அவன் மீது நம்பிக்கை வைத்து உதவி செய்ய முன்வந்தது. பயணத்திற்குத் தேவையான மூன்று கப்பல்கள், தேவையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொடுத்தது. ஆனால் விதியோ அவனை ஓட ஓட விரட்டியது. இவன் ஒரு பைத்தியம் என்றெண்ணி கப்பலை ஓட்ட எந்த மாலுமியும் முன்வரவில்லை. தன் நம்பிக்கையை தளரவிடாமல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளை அனுப்பித் தரும்படி வேண்டினான். சுமார் 85 கைதிகளை அழைத்துப் போக அனுமதியும் கிடைத்தது.
இவனது லட்சியங்களையும், இவனையும், 85 கைதிகளையும் சுமந்துகொண்டு கப்பல் புறப்பட்டு பயணித்தது. இங்கு விதி மீண்டும் சதி செய்தது. இவன் செல்லவேண்டிய திசையோ கிழக்கு. கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதோ மேற்கு.
இவனுடைய அயராத முயற்சி, உழைப்பு இவற்றைக் கண்ட இயற்கை அன்னை விதியின் சதியை முறியடித்து இவனுக்கு வேறு ஒரு பரிசை தந்தாள். அதுதான் அமெரிக்கா.
சரியான லட்சியமும், உண்மையான உழைப்பும் கொண்டவர்களை விதி சதி செய்தாலும் இயற்கை அன்னை கைவிடுவதில்லை.
இளைய சமுதாயமே நீ ஒன்றும் கொலம்பஸ் ஆகவேண்டாம்.
உனக்குள் இருக்கும் உன்னை...
உனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் சாதனையா(ளை)ளனை....
உனக்குள் இருக்கும் கொலம்பஸ்-ஐ...
உடனே கண்டுபிடி
- please
வெற்றி உன் பாக்கெட்டில்
No comments:
Post a Comment