அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, வணக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவு....
மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.
பொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஜோதிடம் பொய் என்பதற்கு, ஜோதிடம் அறிவியல் பூர்வமானதல்ல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் மனிதர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற கருத்தை முன் வைக்கப் படுகிறது.
ஜோதிடம் வெறும் அறிவியல் பூர்வமானது என்பதைவிட “ஜோதிடம் அறிவியல் பூர்வமானதும் விஞ்ஞானப் பூர்வமானதும் ஆகும்” என்பதே சரி. அறிவியல் வேறா? விஞ்ஞானம் வேறா? என்று கேட்டால்.... ஆம் இரண்டும் வேறு வேறுதான்.
எப்படி? அறிவியல் என்பது அறிவு தொடர்புடையது. விஞ்ஞானம் என்பது வின்+ஞானம் விண்ணில் உள்ள நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் பற்றிய ஞானம் ஆகும்.
ஜோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதும் அறிவியல் பூர்வமானதும் என்பது பற்றியும், கிரகங்களும் நட்சத்திரங்களும் மனிதர்களை கட்டுபடுத்துகிறது என்பது பற்றியும் என் அறிவுக்கு எட்டியவரை ஒரு ஆய்வு
குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு மருத்துவ ரீதியாக மூன்று காரணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
(அ) ஆண் மலடு அல்லது குறைபாடு,
(ஆ) பெண் மலடு அல்லது குறைபாடு,
(இ) ஆண் பெண் இருவரும் மலடு அல்லது குறைபாடு.
இந்த மூன்றுவிதமான பிரச்சனைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு உண்டு.
ஆனாலும் மருத்துவ அறிவியலால் தீர்க்க முடியாத நான்காவதாக ஒரு பிரச்சனை இருக்கின்றது. அதாவது இருவருக்குமே எந்தவிதமான குறையும் இல்லை. அனைத்துவிதமான பரிசோதனைகளிலும் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் குழந்தை இல்லை.
இவ்வகை தம்பதியருக்கு, குழந்தை கண்டிப்பாகப் பிறக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மருத்துவரிடம் செல்கிறார்கள். மீண்டும் பரிசோதனை. பரிசோதனை முடிவு அனைத்தும் சரியாக இருக்கிறது. எந்தக் குறையும் இல்லை. மருத்துவரின் கருத்து “எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களால் முடிந்தவரை அனைத்தும் செய்தாகிவிட்டது. இதற்குமேல் தெய்வத்தின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையை கைவிடாதீர்கள்.”
நம்பிக்கையுடன் மேலும் சில ஆண்டுகள். ஆனாலும் குழந்தை இல்லை. இங்கு மருத்துவரின் திறமை, அறிவு, மருத்துவ அறிவியல் ஆகிய எவற்றையும் குறை கூறவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. (மருத்துவ) அறிவியலாலும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளும், சங்கதிகளும் இருக்கிறது. என்பதை சுட்டிக் காட்டுவதே இக் இக்கட்டுரையின் நோக்கம்.
இனி ஜோதிட ரீதியாக மேற்படி குழந்தை இல்லாமை பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது பற்றி காண்போம்.
ஜோதிடரீதியாக குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் (கிரக அடைவு) நிறைய உண்டு. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அது சாத்தியம் இல்லை. காரணம், மருத்துவரீதியாக குழந்தை இல்லாமைக்கு எவ்வளவோ கரணங்கள் இருந்தாலும், கண்டுபிடிக்க முடியாத காரணங்களும் உண்டல்லவா? கண்டுபிடிக்கப்பட்ட காரனங்களிலேயே ஒருவருக்கு தெரிந்த காரணம் மற்றவருக்கு தெரியாமலிருக்கிறது என்பதும் உண்மைதானே? அதுபோல சோதிடத்திலும் நமது அறிவுக்கு அப்பாற்பட்ட பல சங்கதிகள் இருக்கின்றன என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இந்தக் கட்டுரையில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விளக்கங்ககளை தந்திருக்கிறேன்.
ஒரு ஜாதகத்தில் ஆணின் சுக்கிலத்திற்கும்(விந்தணு), பெண்ணின் சுரோனிதத்திற்கும்(கரு முட்டை) மூல கர்த்தாவாக சுக்கிரனும், கரு உற்பத்திக்கு கர்த்தாவாக குருவும், ஐந்தாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதியும், குழந்தை பேறு-க்கு காரணமாக இருக்கும். இவை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
ஆணாக இருந்தால் விந்தணு உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட விந்தணுக்களின் செயல்திறன் ஆகியவற்றிற்கு மூன்றாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதி காரணமாக இருக்கும்.
கீழே உள்ள இரண்டு ராசி கட்டங்களையும் பார்க்கவும். இரண்டிலுமே லக்கினம் குறிக்கப்படவில்லை, என்பதை கவனிக்கவும். ஒரு சில விஷயங்களை லக்கினம் இல்லாமலேயே நிர்ணயிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டவே லக்கினத்தை குறிப்பிடவில்லை. மேலும் இரண்டு கட்டங்களும் வாக்கிய கணிதப்படி கணிக்கப்பட்டவை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஆணின சுக்கிலத்திற்கும், பெண்ணின் சுரோனிதத்திற்கும் மூல கர்த்தாவாக சுக்கிரன் காரணமாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்
கீழே உள்ள 08-10-1978 / காலை 6.00 க்கு ஒரு கட்டமும் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கு ஒரு கட்டமும் உள்ளது.
இரண்டு கட்டங்களிலும் சுக்கிரன், கேது, குரு ஆகிய மூன்று கிரகங்களும் வெளிர் நீல நிற கட்டத்தில் இருப்பதை கவனிக்கவும். இப்படியான அமைப்பை, மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோனத்தில் இருப்பதாக ஜோதிடத்தில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் கேதுவும், கேது நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் குருவும் குரு நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் சுக்கிரனும் இருப்பது திரிகோண அமைவு எனப்படும். இப்படி உள்ள கிரகங்களை, கிரகங்கள் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது
கேது 8-10-1978 அன்று (மீனத்தில்) 10 8’ 31” லும், 9-10-1978 அன்று 10 2’ 29” லும்
சுக்கிரன் 8-10-1978 அன்று (விருச்சிகத்தில்) 00 37’ 6” லும், 9-10-1978 அன்று 10 32’ 42” லும்
குரு 8-10-1978 அன்று (கடகத்தில்) 120 56’ 10” லும், 9-10-1978 அன்று 130 10’ 06” லும்
என்ற வரிசையில் அமையும். இந்த வரிசைப்படி கேது சுக்கிரன் ஆகிய இருகிரகங்களுக்கும் இடையே 1 பாகைக்கும் குறைவான வித்தியாசம் இருக்கிறது. இப்படி சுக்கிரனும் கேதுவும் மிக நெருக்கமான நிலையில் இருந்தால், இப்படி ஒரு அமைவு ஆண்களின் ஜாதகத்தில் அமைந்தால் (அதாவது 08-10-1978 / காலை 6.00 க்கு மேல் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்குள் பிறந்துள்ள) பெரும்பாலானவர்களுக்கு விந்தணு (சுக்கிலம்) உற்பத்தியில் பிரச்சினை இருக்கும். அதாவது விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது விந்தனுக்களின் வாழும் தன்மை (விந்தணு ஆணிடமிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கருக்குழாய் வழியாக சென்று கர்ப்பப்பையை அடைந்து கரு உருவாகும் வரை உள்ள கால இடைவெளி) குறைவாக இருக்கும். இதே அமைவு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு கரு முட்டை (சுரோணிதம்) உற்பத்தி ஆவதில் பிரச்சனை இருக்கும். அதாவது விந்தணுவை தன்னுள் வாங்கி கருவாக்க முடியாத அளவிற்கு சக்தி அற்றதாக இருக்கும். அல்லது கர்ப்பப்பை சுருங்கி இருக்கும். இந்த வகை குறைபாட்டை மருத்துவத்தில் கண்டுபிடித்து தீர்வு காணமுடியும். இந்த தீர்வு வெற்றி அடைவதும், அடையாததும் காலத்தின் கையில்.
மேலே குறிப்பட்ட கால கட்டத்திற்குள் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் (60% முதல் 70% வரை) மேலே குறிப்பிட்ட குறைபாடு காணப்படும். லக்கினப்படி ஆராய்ந்தால் மேலும் கூடுதலான தகவல் கிடைக்கும்.
இந்தக் கட்டுரையையும் இதன் தொடர்ச்சிகளையும் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், ஒவ்வொரு பதிவிலும் உள்ள கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை, (மேற்குறிப்ட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு இடைபட்ட காலத்தில் பிறந்த தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு) இங்கு பின்னூட்டம் இடவும். வேறு தேதியில் பிறந்திருந்தாலும் குழந்தை இல்லாத தம்பதியினர்களில் (60% முதல் 70% வரை) பெரும்பாலானவர்களுக்கு சுக்கிரன், குரு இரண்டு கிரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ ராகு அல்லது கேது அல்லது பகை கிரகங்களினால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளவும். இதுவரை பல்வேறு தலைப்புகளில் “சர்வே” நடத்தப்பட்டிருக்கிறது. அதுபோல இதுவும் ஒரு “சர்வே” இந்த சர்வே-க்கு உங்களின் ஆதரவை அளித்து ஜோதிடத்தின் பரிமாணத்தை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.
வாழ்க வளமுடன்
மேற்படி விஷயங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
இதற்கான மேலும் கூடுதல் தகவல் மற்றும் விளக்கங்களுடன் அடுத்த பதிவில்.....
No comments:
Post a Comment