Pages

Tuesday, 4 September 2012

பெரியாரிசம் ....... (பதிவு 9)

திருக்குறளில்....பெண்ணீயம்...

அதிகாரம் 6.

குறள் 1)

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இதன் பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள் கணவனின் வாழ்வுக்குப் பெருந்துனையாவாள் – டாக்டர் கலைஞர்

குறள் 2)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

இதன் பெருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும், அதற்க்கு தனிச் சிறப்பு கிடையாது. – டாக்டர் கலைஞர்

குறள் 3)

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

நல்லப் பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. – டாக்டர் கலைஞர்.

குறள் 4)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

இதன் பொருள்:

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பை பெற்றுவிட்டால் அதைவிட பெருமைக்குரியது வேறு யாது?
- டாகடர் கலைஞர்

குறள் 5)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதன் பெருள்:

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவளாவாள்.
-டாக்டர் கலைஞர்.

இதற்க்கு என்னுடைய தகப்பனார் (முதுகலை தமிழாசிரியர்) தந்த விளக்கம் என்னவென்றால்...

தெய்வத்தை மதிக்கிறாளோ இல்லையோ, கணவனை மதித்து, அவன்மீது என்றும் மாறாத அன்புகொண்டு வாழும் பெண்....பல ஆண்டுகளாக மழையில்லாமல் வாடும் காலத்தில் மழை பெய்தால் எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ, அந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானவள்.

குறள் 6)

தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்.

கற்பு நெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்கு பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவளே பெண்.
- டாக்டர் கலைஞர்

குறள் 7)

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

இதன் பொருள்:

பெண்களை அடக்கி கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாக்கின்ற புறக்காவலால் எந்த பயனும் இல்லை. தனக்குத்தானே சுயகட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு நேர்மை தவறாமல் தன்னைத்தானே காத்துக் கொள்வதே பெண்மையின் சிறப்பு.
- என் தகப்பனார்.

குறள் 8)

பெற்றாள் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

இதன் பொருள்:

தான்பெற்ற துணைவனை பேணிப் பாதுகாக்கும் பெண்டிர் புகழுலகை அடைகின்ற பெருமை படைத்தவர்களாவர்.

குறள் 9)

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழுக்குரிய குணநலன்களை உடைய மனைவியை அடையாதவர்க்கு, தம்மை பழித்துப் பேசுவோர் முன் தலை நிமர்ந்து நடக்கமுடியாமல் குன்றிப் போய்விடுவார்கள்.

புகழுக்குரிய குணநலன்களை உடைய மனைவியை அடைந்தவன், யாருக்கும் எப்பொழுதும் தலைகுனியாமல் சிங்கம் போல பீடுநடை போடுவான்.

குறள் 10)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

இல்வாழ்விற்கு சிறப்பாவது மனைவியின் சிறப்பு மிக்க குணங்களே.இதற்கு மேலும் சிறப்பு நல்ல குழந்தைகளை பெறுவதே.

மேற்கண்ட 10 குறள்களிலும் வள்ளுவப்பெருந்தகை எந்த ஓரு இடத்திலும் பெண்மையை சிறுமைபடுத்தவில்லை, அடிமை படுத்தவில்லை. மாறாக மொத்த சமுதாய முன்னேற்றமும் பெண்களின் கைகளில், ஒழுக்கத்தில்தான் உள்ளது. என்பதையே வலியுறுத்திக் கூறுகிறார்.

“எந்த ஓரு ஆணின வெற்றிக்குப் பின்னால் ஓரு பெண்தான் கண்டிப்பாக இருப்பாள்” இது அனுபவசாலிகளின் குறிப்பு.

பெண்களை ஒழுக்கத்துடன் இருங்கள் என்று வள்ளுவப் பெருதகை சொல்லுவது தவறா?

“*”`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.”*” என்று திரு துரை.சந்திரசேகரன் அவர்கள், ஈரோடு. வே. ராமசாமி அவர்கள் கூறியதாக எடுத்துரைக்கிறார்.

ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று “பகுத்தறிவுப் பகலவன்”(?) கூறியது சரியா?

ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று கூறுவது எப்படியிருக்கிறது? என்றால், ஆண்கள் தவறு செய்கிறார்கள் எனவே பெண்களே நீங்களும் தவறு செயுங்கள் என்று கூறுவதாக இருக்கிறது.

“பகுத்தறிவுப் பகலவன்”(?)-னின் வழிகாட்டுதலின்படி தங்கள் குடும்பப் பெண்மணிகளை அனுமதிப்பார்களா? (இந்த வரியை எழுதியததற்க்காக பகுத்தறிவாளர்களின் வீட்டுப் பெண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தவரியை எழுதத் தூண்டியவர்களே பகுத்தறிவாளர்கள்(?)தான்)

இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் இப்படிப்பட்ட பகுத்தறிவு எங்களுக்குத் தேவை இல்லை..
தேவை இல்லை..தேவையே இல்லை...

இவர்களை எல்லாம் ஆயிரமல்ல, லட்சம் விவேகானந்தர்கள் வந்தாலும் திருத்தமுடியாது.. திருத்த்த்தவ்வ்வ்வே முடியாது


என்கருத்து  : ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் , சுயகட்டுப்பாட்டுடன் இருந்தாலே நாடு வெகு சீக்கிரம் நன்மை அடையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...

மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

குறள்களும் விளக்கங்களும் அருமை...

முடிவில் கருத்து : சந்தேகமே இல்லை... உண்மை...
தனி மனித ஒழுக்கம் வேண்டும்...

Post a Comment