Pages

Monday, 22 August 2011

தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்...

வாழ்க வளமுடன்
சூரியநமஸ்காரம் செய்வது எப்படி என்று கீழே நிகழ் படமாக கொடுத்திருக்கிறேன்




சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கிக் கசக்கிப் பிடித்து விடுவது போன்ற மசாஜ் செய்யப்படுகின்றன. மலச்சிக்கல் மறைகின்றது. குன்மமும் பசியின்மையும் பறந்தோடுகின்றன. வயிற்றுக்குள் இருக்கும் இசைவாகப் பணிபுரிகின்றன. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்குவதே இல்லை. இதனால் உறுதியடைகின்றது.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
இதயத்தை முடக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
மாறி மாறி, மடக்கி நீட்டி – நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது. சென்றதைப் பற்றிய கவலையும் வரப் போவதைப் பற்றிய அலட்டலுமின்றி உள்ளம் அமைதியடைகின்றது. பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிகத் தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறா முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.
சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன. கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும். தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.
யார், எங்கு, எப்படி, எப்போது செய்வது?
சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம். அறையிலும் செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

Thursday, 18 August 2011

இன்று சித்தாசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.



பொதுவாக எந்த ஒரு ஆசனத்தையுமே பொறுமையாகத்தான் செய்தல் வேண்டும். ஏதோ கடமைக்கு, வேலைக்குச் செல்லும் அவசரத்தில் செய்தல் கூடாது. அது மேலும் உடலுக்கு தீங்கிழைக்குமே ஒழிய சீர்படுத்தாது. ஆகையால் ஆசனங்களை பொறுமையாக செய்து காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட வேண்டும்.

இன்று சித்தாசனம் பற்றி தெரிந்து கொள்வோம்.

கீழே படத்தில் உள்ளவாறு அமர்ந்து கொள்ளவேண்டும்.



கைகளை நீட்டி கால் முட்டிகளில் வைக்க வேண்டும். நிமிர்ந்த நிலையில் காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து வரவேண்டும்.

கீழே படங்களில் உள்ளது போல கைகளை துவள விட்டோ தலையை குனிந்த்படியோ இருக்கக் கூடாது.







இதை முறையாகக் கடைப் பிடித்தால் உடலுக்குத் தேவையான பிராண சக்தி கிடைக்கும்.

மன அழுத்தம் நீங்கும். இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நீண்ட ஆயுளைத் தரும் ஆசனங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

Friday, 12 August 2011

யோகா முத்ரா ஆசனமும் செய்யலாமே..



பத்மாசனத்தில் அமர்வது போல அதே நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்பு இரண்டு கைகளையும் முதுகுப்புறமாக பின்புறம் கொண்டு வந்து கையின் மணிக்கட்டு பகுதியை இடது கையால் (இறுகப் பிடிக்காமல்) லேசாகப் பற்றிக் கொண்டே மெதுவாக முன்பக்கமாக குனிய வேண்டும்.

படம் 1



நன்கு குனிந்து, தலையின் உச்சி தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். ஆரம்பத்தில் தரையை தொட முடியாவிட்டால் சிரமப்பட வேண்டாம். முரட்டுத்தனம் வேண்டாம். நாளடைவில் சரியாகி விடும். தரைதொட்ட அந்த நிலையில் சற்றே இழுத்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே நிமிர்ந்து மீண்டும் பத்மாசன நிலைக்கு வந்து (பிணைக்கப்பட்ட கைகளை ஒருபோதும் விலக்கக் கூடாது) மெதுவாகப் பின்னர் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்பு சொன்னது போல தரையை நோக்கி குனிய வேண்டும். இவ்வாறு மூன்று தடவைகள் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நிமிட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படம் 2



நிமிர்ந்து வரும்போது மூச்சை நன்றாக உள்ளே இழுப்பதும், மீண்டும் குனிந்து கொண்டே வருகையில் தாரளமாய் மூச்சை வெளியே விடுவதும் மிக மிக அவசியம். அதுவே நுரையீரல் நன்கு விரியக் காரணமாகி, வலிமை கொடுக்கும்.

பலன்கள்:

ஜீரண உறுப்புகள் பலமடைகின்றன. அதனால் அவற்றின் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக நடை பெறுகின்றன. குடலின் இயக்கம் சீராகிறது. வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் ஓடிவிடும். இந்த ஆசனம் நீடித்த மலச்சிக்கல் நோய் உள்ளவர் களை விரைவில் குணப்படுத்தி விடும். இடுப்பும், வயிற்றுப் பாகமும் அழகான அமைப்பை பெற்றிடும். நுரையீரல் நோயே வராது. முக்கியமாக ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

மேலும் யோகாசனங்களுக்கு இங்கே

வாழ்க வளமுடன்....

Thursday, 11 August 2011

பத்மாசனம் செய்து பாருங்களேன்..


பத்மாசனம் 

சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும். பிராணயாமம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.


படம் 1 (பத்மாசனம்)


படம் 2 (பத்மாசனம்)

செய்யும் முறை

கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம்.


ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம். வலி தொந்தரவு ஏற்பட்டால் ஆசனத்தைக் கலைத்து விடலாம்.


பத்மாசனம் மட்டுமல்ல எந்த ஒரு ஆசனத்தையும் கண்டிப்பாக உடலை வருத்தி செய்யக்கூடாது.


படம் 1 (வலது மற்றும் இடது அர்த்த பத்மாசனம்)



பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வலது அர்த்த பத்மாசனத்தையும் பிறகு இடது பத்மாசனத்தையும் செய்து பழகிக் கொண்டபிறகு பத்மாசனத்தை செய்யலாம்.


பயன்கள்


பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது.


மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகிறது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.

படம் 3



படம் 3- ல் காட்டியுள்ளது போல தலையை குனிந்த படி இருக்கக் கூடாது.

முத்குத் தண்டும் தலையும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்





உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் அளிக்கவும்.


வாழ்க வளமுடன்.